கைதான தமிழர்களை அரசியல் கைதிகளாக கணிக்க முடியாது என்று நீதி அமைச்சர் அறிவிக்க ஒரே காரணம் இனவாதம் ."- எம்.பி பொ.கஜேந்திரகுமார் தெரிவிப்பு

வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் உரிமைக்காகப் போராடி கைது செய்யப்பட்டவர்களை அரசியல் கைதிகளாக கணிக்க முடியாது என்று தேசிய மக்கள் சக்தியின் நீதி அமைச்சர் அறிவிப்பதற்கு ஒரே காரணம் இனவாதம் ."- இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக் கையில்,
“கடந்த வாரம் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, முன்னாள் கைதிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினரின் ஆதரவுடன் கையொப்பம் பெறும் போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டு அது வெற்றி பெற்றுள்ளமையை நாங்கள் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
விசேடமாக தமிழ் மக்களுக்காகப் போராடி ஒரு அரசியல் தீர்வைப் பெறுவதற்கான தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் மௌனிக்கப்பட்டபோது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தப் பயங்கரவாத தடைச் சட்டம் அரசாங்கத்தினாலேயே ஒரு சட்டவிரோதமான, கொடூரமான, சட்டத்தின் ஆட்சியை மீறுகின்ற ஒரு ஆவணமாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
அந்தக் கருத்து ஸ்ரீலங்கா அரசினால் சர்வதேச மட்டத்தில் விசேடமாக ஐ.நா. பேரவையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதாவது, பயங்கரவாதத் தடைச் சட்டம் ஒரு சட்டத்தின் ஆட்சி முறைக்கும், ஜனநாயகத்துக்கும் விரோதமான விடயமாகவும் கருதப்படுகின்றது.
அது முற்றிலும் நீக்கப்பட்டு ஒரு புதிய சட்டம் சர்வதேச சட்டத்துக்கு அமைவாக கொண்டுவரப்பட வேண்டும் என்றும், அல்லது இருக்கும் சட்டத்தை முற்றுமுழுதாக மாற்றியமைத்து சர்வதேச நியமங்களுக்கு அமைவாக மாற்றப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்தக் கொடூரமான பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்ற கோஷம் மேலோங்கி நிற்கின்றது.
இது கையொப்பம் பெறும் போராட்டம் ஊடாகவும், வேறு வழிகளிலும் வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அரசியல் கைதிகள் என்று யாரும் இல்லை என்று கூறுகின்றார்.
அவர் அதனைச் சொல்வதற்கு அரசியல் பின்னணிதான் காரணம். ஏனெனில் இதற்கு முதல் அவருடைய தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தேர்தல் காலத்தில் வடக்கு, கிழக்குக்கு வந்து சிறையில் உள்ள அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்று பேசியிருந்தார்.
ஆனால், தற்போது நீதி அமைச்சர் அந்த விடயத்திலிருந்து பின்வாங்குகின்றார். இதுவொரு அரசியல் காரணமாகத்தான் இருக்க வேண்டும்.
அந்த வகையில் தேசிய மக்கள் சக்தியின் ஜே.வி.பி. அமைப்பினரின் உறுப்பினர்களும் இந்தப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
அவர்களும் அரசியல் கைதிகளாகவே இருந்தனர்.
இப்போதும் கூட அவர்கள் ஆட்சியில் இருந்திருக்காவிட்டால் வேறு ஒரு தரப்பு ஆட்சியில் இருந்திருந்தால், அவர்களது உறுப்பினர்கள் கைது செய்யப்படும் போது, அது அரசியல் நோக்கத்துக்கான கைதாகவே இருந்திருக்கும்.
ஆனால், அதே நிலையில், வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் உரிமைக்காகப் போராடி கைது செய்யப்பட்டவர்களை அரசியல் கைதியாக கணிக்க முடியாது என்று தேசிய மக்கள் சக்தியின் நீதி அமைச்சர் அறிவிப்பதற்கு ஒரே காரணம் இனவாதம் தான்.
இது கண்டிக்கப்பட வேண்டிய விடயம்.
இந்த நீதி அமைச்சர் கடந்த காலங்களில் இருந்த பிற்போக்குவாத நீதி அமைச்சர்களின் நிலைப்பாட்டுடன் இணைந்து போவது ஒரு பலத்த ஏமாற்றத்தைத் தரும் விடயமாகும்.
இது தேர்தல் காலத்தில் வடக்கு, கிழக்கில் மாற்றம் என்று வந்த தேசிய மக்கள் சக்தியின் நாடகம் என்பதை நிரூபிக்கும் விடயமாகவே காணப்படுகின்றது." - என்றார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
