தமிழ்நாட்டில் அரச மருத்துவர் கத்தியால் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் அரச மருத்துவர்கள் போராட்டம்



சென்னை கிண்டியில் அரச மருத்துவர் கத்தியால் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் அரச மருத்துவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர் சிறப்பு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர் பாலாஜியை விக்னேஷ் என்ற இளைஞர் நேற்று முன்தினம் சரமாரியாக கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தினார்.
இதில் படுகாயம் அடைந்த மருத்துவர் பாலாஜிக்கு அந்த மருத்துவ மனையிலேயே தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், மருத்துவர் தாக்கப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகளை புறக்கணிப்பதாக அரசு மருத்துவர்கள் சங்கம், இந்திய மருத்துவ சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டது.
தர்ணா போராட்டம், ஒத்துழையாமை போராட்டம் நடத்தப்படும் என அனைத்து அரச மருத்துவர் சங்க கூட்டமைப்பினரும் அறிவித்தனர்.
அதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரச மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகளில் மருத்துவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னையில் தாக்குதல் சம்பவம் நடந்த கிண்டி கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர் சிறப்பு மருத்துவமனை, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவர்கள். செவிலியர் கள், மருத்துவ மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகம் முழுவதும் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
சென்னையில் அரசு வைத்தியர்கள் சங்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன், அரச மருத்துவர்களுக்கான சட்ட போராட்ட குழு தலைவர் பெருமாள் பிள்ளை. ஈரோட்டில் இந்திய மருத்துவ சங்க தமிழக தலைவர் அபுல்ஹாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
முன்னதாக, தமிழ்நாடு அரச வைத்தியர்கள் சங்கத்தினர் காலவரையற்ற போராட்டம் அறிவித்த நிலையில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதில் உடன்பாடு ஏற்படாததால், நேற்று போராட்டத்தை தொடர்ந்தனர்.
இந்நிலையில், கோரிக்கையை நிறைவேற்ற அரசுக்கு ஒரு மாதம் அவகாசம் அளித்து, போராட்டத்தை வாபஸ் பெறுவதாக, அந்த சங்கத்தின் தலைவர் செந்தில் அறிவித்துள்ளார்.
மருத்துவர்கள் போராட்டம் காரணமாக, தமிழகம் முழுவதும் அரச மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள் எண்ணிக்கை நேற்று கணிசமாக குறைந்தது.
இதனால், மருத்துவ சேவையில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.
அதே நேரம், பல்வேறு மருத்துவமனைகளில் கடந்த 2 நாள்களாக திட்டமிடப்பட்டிருந்த அறுவை சிகிச்சைகள் தள்ளிவைக்கப்பட்டன.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
