
யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தில் சாரதி மற்றும் நடத்துனர் மீது இனந்தெரியாத இருவர் தாக்குதல் நடத்திய நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர் என்று காரைநகர் இ.போ.ச. சாலை முகாமையாளர் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
காரைநகர் சாலையின் 786 வழித்தட பஸ் சேவை சாரதி யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று யாழ். பஸ் நிலையத்தில் பஸ்ஸைத் தரித்தார்.
தொடர்ந்து தேனீர்சாலைக்கு தனது பஸ் நடத்துனருடனும் யாழ்.சாலை நடத்துனருடனும் அவர் சென்றார்.
அவ்வேளை திடீரென தேனீர்சாலைக்குள் வந்த இருவர் சாரதியின் தலையில் போத்தலால் அடித்தனர்.
யாழ். சாலை நடத்துனர் தாக்குதலைத் தடுக்க முற்பட்ட போது அவரைக் கத்தியால் வெட்டுவதற்கு மேற்படி இருவரும் கலைத்துச் சென்ற நிலையில் அவரது கையில் காயம் ஏற்பட்டது.
தொடர்ந்து பொலிஸாரைக் கண்டவுடன் இருவரும் தப்பித்துச் சென்றனர்.
உடனடியாகக் காயமைடந்த சாரதியும், நடத்துனரும் ஏனைய சாரதிகள், நடத்துனர்களின் உதவியுடன் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.
தாக்குதலாளிகள் தப்பியோடிய போது அவர்களைப் பொலிஸார் கைது செய்யாது பார்த்துக் கொண்டிருந்தனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து சிறிது நேரம் பஸ் சேவை இடம்பெறாமல் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட போதும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு சந்தேகநபர்களைக் கைது செய்வதாக வழங்கிய உத்தரவுக்கமைய சேவைகள் இடம்பெறுகின்றன என்று காரைநகர் இ.போ.ச. சாலை முகாமையாளர் தெரிவித்தார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
