கனடா மீது வரி, கனடாவை அமெரிக்காவின் 51 ஆவது மாகாணமாக மாற்ற அழுத்தம் தந்தாலோ அமெரிக்கா விளைவைச் சந்திக்கும்.-- கனடா எச்சரிக்கை

1 year ago



கனடா மீது கூடுதல் வரிகளை விதித்தாலோ அல்லது கனடாவை அமெரிக்காவின் 51 ஆவது மாகாணமாக மாற்ற அழுத்தம் தந்தாலோ அமெரிக்கா கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று கனடா எச்சரித்துள்ளது.

அத்துடன் அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் மின்சாரம், எரிபொருள்கள் என அனைத்தும் நிறுத்தப்படுமெனவும் கனடா தெரிவித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள டொனால்ட் ட்ரம்ப், அண்மையில் கனடா, பனாமா கால்வாய் மற்றும் கிரீன்லாந்தை கையகப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.

குறிப்பாகக் கனடாவை அமெரிக்காவுடன் இணைக்க வேண்டும் என்றும் கனடாவிற்கு கூடுதல் வரி விதிக்கப்படுமெனவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், டொனால்ட் ட்ரம்ப், கனடாவின் பொருள்களுக்கு எதிராக கூடுதல் வரி விதிக்க முடிவு செய்தால், அமெரிக்காவால் உற்பத்தி செய்யப்படும் பொருள்களுக்கு கடுமையான வரி விதிக்கப்படுமென கனடா எச்சரித்துள்ளது.

அத்துடன், கனடாவின் பதிலடி பயங்கரமாக இருக்கும் என்றும் இதற்கான ஆரம்பக் கட்ட நடவடிக்கையை கனடா ஏற்கனவே முன்னெடுத்துள்ளது

எனவும் அமெரிக்காவின் நடவடிக்கையைப் பொறுத்து அமெரிக்காவிற்கு கூடுதல் கட்டணங்கள் விதிக்கப்படுமெனவும் அறிவித்துள்ளது.

குறிப்பாக விஸ்கி மற்றும் வொஷிங் மெஷின்கள் போன்ற அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பல்வேறு பொருள்களுக்கு வரி விதிக்க கனடா திட்டமிட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒவ்வொரு வருடமும் கனடா அமெரிக்காவிற்கு கணிசமான அளவு கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு மற்றும் மின்சாரத்தை வழங்கி வருகிறது.

2024 இல் கனடா ஒரு நாளைக்கு சுமார் 2.76 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெயை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்தது.

இது அமெரிக்க கச்சா எண்ணெய் இறக்குமதியில் 60 வீதம் ஆகும்.

அந்த அளவிற்கு அமெரிக்கா கனடாவை நம்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.