போராட்டக் களத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற அவுஸ்திரேலியாவின் பெண் ஊடகவியலாளர் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு

அமெரிக்கா - லொஸ் ஏஞ்சல்ஸ் போராட்டங்கள் நான்காவது நாளை எட்டியுள்ளது.போராட்டக் களத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற அவுஸ்திரேலியாவின் பெண் ஊடகவியலாளர் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பின்னர் நிர்வாகத்தில் பல்வேறு-அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். அதன்படி “அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை” என்ற கொள்கையை கடைப்பிடிக்கும் அவர், சட்ட விரோதமாக குடியேறியவர்கள் அந்நாட்டைவிட்டு வெளியேறவும் உத்தரவிட்டார்.
இதனையடுத்து அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
ட்ரம்பின் இந்த நடவடிக்கைக்கு பல உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனாலும் ஜனாதிபதி ட்ரம்ப் தனது முடிவில் உறுதியாக இருக்கிறார்.
இதையடுத்து நாடு முழுவதும் சட்டவிரோதமாக குடியேறியவர்களை கண்டறிய குடியேற்ற அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை எதிர்த்து அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் வெடித்துள்ளது.
குறிப்பாக கலிபோர்னியா மாகாணம் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பொலிஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது.
இந்த வன்முறையை கட்டுப்படுத்த லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கலவரம் நடந்த பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
வன்முறையை கட்டுப்படுத்த இராணுவ வீரர்கள் கண்ணீர் புகைக் குண்டுகள், ரப்பர் புல்லட் துப்பாக்கிகள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் போராட்டம் குறித்து செய்தி சேகரிப்பதற்காக அவுஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஊடகவியலாளர் லாரன் டோமாசி சென்றிருந்தார்.
அங்கு வன்முறை நடைபெறும் பகுதிக்கு சென்று, அங்குள்ள நிலவரம் குறித்து கமரா முன்பு ஊடகவியலாளர் லாரன் விளக்கிக் கொண்டிருந்தார்.
இதன்போது, பொலிஸார் ஒருவர் ரப்பர் புல்லட் துப்பாக்கியால் லாரனை குறிவைத்து சுட்டார். இந்த சம்பவம் வீடியோவில் பதிவாகியுள்ளார்.
இந்த சம்பவத்தில் லாரனின் காலில் ரப்பர் புல்லட் பாய்ந்தது. அவர் வலியால் அலறியபடி அங்கிருந்து விலகிச் சென்றார்.
அத்தோடு தனக்கு ஒன்றும் ஆகவில்லை என்று அவர் கூறுவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.
மேலும் அருகில் நின்றவர் ஒருவர் பொலிஸ் அதிகாரியை நோக்கி, "நீங்கள் ஒரு ஊடகவியலாளரை சுட்டுவிட்டீர்கள்" என்று கூறுகிறார்.
இந்த சம்பவம் குறித்து லாரன் பணிபுரிந்து வரும் தனியார் செய்தி நிறுவனம் அளித்துள்ள விளக்கத்தில், "லாரனும், அவருடன் சென்ற புகைப்பட கலைஞரும் தற்போது நலமாக உள்ளனர்.
அவர்கள் தங்கள் பணியை தொடர்ந்து செய்து வருவார்கள். போராட்டங்களின்போது முன்களத்தில் நின்று பணியாற்றும் ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளக்கூடிய ஆபத்துகளை இந்த சம்பவம் தெளிவாக நினைவூட்டுகிறது.
முக்கிய தகவல்களை வழங்குவதில் செய்தியாளர்களின் பங்கு எவ்வளவு முக்கியமானது என்பதை இது உணர்த்துகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், இந்த சம்பவம் கொடூரமானது, ஒரு ஊடகவியலாளர் என்கிற எந்தவொரு தெளிவும் இல்லை அவர்களுக்கு.
இந்த சம்பவம் தொடர்பில் நாங்கள் ஏற்கனவே அமெரிக்க நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பியுள்ளோம். நடந்த சம்பவத்தை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை," எனத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், டோமாசியுடன் தான் பேசியதாகவும், அவருக்கு காயத்தினால் வலி ஏற்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகத்துக்கு கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
"அவள் நலமாக இருக்கிறாள். அவள் மிகவும் மீள் எழுச்சி தன்மை கொண்டவள்" என அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரித்தானிய புகைப்படக் கலைஞரின் காலில் உயிருக்கு ஆபத்தான தோட்டா பாய்ந்ததால் அவசர சத்திர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
