ஆபிரிக்கப் பெரும் நத்தைகளைக் கட்டுப்படுத்தாவிடில் விரைவிலேயே பேராபத்துகள் விளையும் பொ.ஐங்கரநேசன் எச்சரிக்கை


ஆபிரிக்கப் பெரும் நத்தைகளைக் கட்டுப்படுத்தாவிடில் விரைவிலேயே பேராபத்துகள் விளையும் பொ.ஐங்கரநேசன் எச்சரிக்கை
ஆபிரிக்காவைத் தாயகமாகக் கொண்ட பெரும் நத்தைகள் சமீபத்தில் பெய்த பெருமழையின் பின்னர் பல பகுதிகளில் படையெடுக்க ஆரம்பித்துள்ளன.
ஆபிரிக்கப் பெரும் நத்தைகள் ஏற்கனவே இங்கு அவதானிக்கப்பட்ட போதும் இப்போது இவற்றின் பெருக்கம் அதிகமாக உள்ளது.
பயிர் பச்சைகளையெல்லாம் தின்றுதீர்க்கும் இவை, உள்ளூர் உயிரினங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதோடு நோய்களைப் பரப்பும் காவிகளாகவும் செயற்படுகின்றன.
இவற்றை இப்போதே கட்டுப்படுத்தத்தவறின் விரைவில் பேராபத்துகளை விளைவிப்பவையாக இவை அமையும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார்.
ஆபிரிக்க நத்தைகள் தொடர்பாக இன்று ஞாயிற்றுக்கிழமை (22.12.2024) பொ. ஐங்கரநேசன் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் அலுவலகத்தில் நிகழ்த்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்
ஆபிரிக்க பெரும் நத்தைகள் (African Giant Snail-Lissachtina fulica) பிரித்தானியர் ஒருவரால் பின்விபரீதங்கள் புரியாமல் இலங்கைக்குள் எடுத்துவரப்பட்ட ஓர் அந்நியஇனம்.
ஒரு நத்தையிலேயே ஆண், பெண் இனப்பெருக்க அமைப்புகள் இரண்டும் இருப்பதால் இரண்டு நத்தைகள் சோடி சேரும்போது இரண்டுமே முட்டைகளை உருவாக்குகின்றன.
சராசரியாக 5 தொடங்கி 6ஆண்டுகள் வரை வாழுகின்ற ஒரு நத்தை தன் ஆயுளில் 1000க்கும் அதிகமான முட்டைகளை இடுகின்றது.
அந்நிய இனமான இவற்றை இரையாக்க இலங்கையின் இயற்கைச் சூழலில் இரைகௌவிகள் எதுவும் இல்லை.
இதனால் பல்கிப்பெருகி இப்போது ஓர் ஆக்கிரமிப்பு இனமாக உருவெடுத்துள்ளது.
உலகின் உயிர்ப் பல் வகைமையின் அழிவுக்கு அந்நிய ஊடுருவல் இனங்களும் ஒரு பெருங் காரணமாக உள்ளது.
பகலில் மறைந்திருந்துவிட்டு இரவில் இரைதேடும் ஆபிரிக்க நத்தைகள் பயிர்கள், அலங்காரச் செடிகள், புல்பூண்டுகள் என்று எல்லாவற்றையும் தின்று தீர்த்து வருகின்றன.
ஒரு தாவரத்தில் உள்ள நோய்க்கிருமிகளை இன்னொரு தாவரத்துக்குக் காவிச் செல்கின்றன.
இவற்றோடு மனிதர்களில் மூளைமென்சவ்வு அழற்சியை ஏற்படுத்தும் ஒட்டுண்ணிப் புழுக்களை இவை காவித்திரிவதும் அறியப்பட்டுள்ளது.
ஆபிரிக்க நத்தைகள் பயிர்ச் செய்கைக்கும், உயிர்ப் பல் வகைமைக்கும் அச்சுறுத்தலாக இருப்பதால் இலங்கை அரசாங்கம் இதனை அந்நிய ஊடுருவல் இனமாக அறிவித்துள்ளது.
ஆபிரிக்க நத்தைகளைக் கட்டுப்படுத்துவதற்குத் திணைக்களங்களுக்காகக் காத்திராமல் பொதுஅமைப்புகளும், பொதுமக்களும் முன்வரவேண்டும்.
உப்பு நீர்க்கரைசல் உள்ள பாத்திரம் ஒன்றில் இவற்றை அமிழ்த்துவதன் மூலம் சுலபமாக அழிக்க முடியும்.
ஆபிரிக்க நத்தைகள் நோய்க் காவிகளாகவும் இருப்பதால் வெறும் கைகளால் நேரடியாகத் தொடாமல் இலைகள், கடதாசிகள் போன்றவற்றால் இவற்றைப் பிடிப்பதே பாதுகாப்பானது.
இதனை ஒரு சமூகக் கடமையாகக் கருதி நாம் விரைந்து செயற்படவில்லை எனில் ஏற்கனவே பாரிய பொருளாதாரச் சீரழிவுக்கும், சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்கும் ஆளாகியிருக்கும் இலங்கை இந்நத்தையாலும் பெரும் சீரழிவுகளைச் சந்திக்கநேரும் என்றும் தெரிவித்துள்ளார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
