யாழ்.மாவட்ட அரச அதிபர், பிரதேச செயலாளர்கள் கடமைகளைச் சரியாகச் செய்யாததால் இங்கு சட்டவிரோதச் செயல்கள்.-- அமைச்சர் இ.சந்திரகேசர் தெரிவிப்பு

யாழ்ப்பாணம் மாவட்ட அரச அதிபர், பிரதேச செயலாளர்கள் தங்கள் கடமைகளைச் சரியாகச் செய்யாததால் இங்கு சட்டவிரோதச் செயல்கள் இடம்பெறுகின்றன.
யாழ்ப்பாணத்தில் திருட்டுத் தொழிலை ஒழித்தே தீருவோம்."இவ்வாறு அமைச்சர் இ.சந்திரகேசர் தெரிவித்தார்.
"யாழ்ப்பாணத்தில் சுண்ணக்கல் ஏற்றி வந்த பாரவூர்தி விடயத்தில்
நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் செயற்பட்டது பரவாயில்லை அல்லது நல்லது.
கல் அகழ்வு விடயத்தில் அதிகாரிகளின் அசமந்தப்போக்குக் காணப்படுகின்றது."- என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணம், சரசாலைப் பகுதியில் கல் அகழ்ந்த பகுதிகளைப் பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஒரு லொறியில் சுண்ணக்கல் ஏற்றிச் சென்றபோது, நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் வழிமறித்து அந்த லொறியைப் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.
இந்த விடயமானது கடந்த சில தினங்களாக ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்டது.
இந்நிலையில் நீங்கள் செய்தது தவறு. குற்றச்செயல்கள் இடம்பெறும் போது அவற்றினைப் பொலிஸாருக்குத் தெரியப்படுத்தி, அவர்கள் மூலமாக வைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நான் இளங்குமரனுக்கு அறிவுறுத்தினேன்.
ஆனால், தற்போது பார்க்கும்போது இளங்குமரன் செய்தது பரவாயில்லை அல்லது நல்லது என்றே தோன்றுகின்றது.
இளங்குமரனின் இந்த வேலையால் அனைவரும் கலக்கமடைந்திருப்பதை அவதானிக்க முடிகின்றது.
வெட்ட வெட்டப் பூதம் கிளம்பியது போல் இன்று பல பிரச்சினைகள் வெளிவருகின்றன.
சரசாலைப் பகுதியில் சட்ட ரீதியான வேலைகள், சட்ட ரீதியற்ற வேலைகள் இடம்பெறுகின்றன.
தனியார் காணிகளில் அகழ்வுகள் இடம்பெறுகின்றன, அதற்கு அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன. அதற்கு அருகாமையில் அரச காணிகள் உள்ளன.
அதில் அனுமதி பெறப்படாமல் பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இவற்றையெல்லாம் பார்க்கும் போது சட்டவிரோதமான செயற்பாடுகள் இடம்பெறுகின்றன என்பதை ஊகித்துக்கொள்ள முடிகின்றது.
இந்த விடயத்தில் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் இந்தத் தொழிலைப் புரிகின்ற வியாபாரிகளோ, தொழில் புரிகின்ற ஊழியர்களோ அல்லர்.
மாவட்ட அரச அதிபர், பிரதேச செயலர், கிராம செயலர், புவிசரிதவியல் திணைக்கள அதிகாரிகள் ஆகியோரே இதற்குப் பொறுப்புக் கூற வேண்டும்.
அரச அதிகாரிகள் சரியாகச் செயல்படவில்லை என்று குற்றச்சாட்டை முன்வைக்கின்றேன்.
அத்துடன் இது குறித்து விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கவும் விளைகின்றேன்.
சரசாலையில் உள்ள சுண்ணக்கல்லுக்கும் இளங்குமரன் எம்.பி. மறித்த லொறியில் இருந்த சுண்ணக்கல்லுக்கும் இடையே வித்தியாசம் இருக்கின்றது.
அப்படியாயின் யாழ்ப்பாண மாவட்டம் முழுவதும் இந்தத் திருட்டுத் தொழில் இடம்பெறுகின்றதா என்று கேள்வி எழுகின்றது.
ஒரு சிலர் வந்து, இவ்வாறான நடவடிக் கைகள் எடுப்பதால் தொழில் இல்லாமல் போகின்றது,
வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்றது. மக்கள் பாதிக்கப்படுகின்றார்கள் என்ற குற்றச்சாட்டை முன்வைக்கின்றார்கள்.
ஆனால், இவ்வாறான அகழ்வுகள் மூலமாக ஏற்படுகின்ற அனர்த்தங்களுக்குப் பல பரம்பரைகள் பலியாகும் என்ற விடயத்தை நாங்கள் மறந்துவிடக் கூடாது.
ஒரு சில வியாபாரிகளின் பணப் பசியைப் போக்கும் தேவைக்காக இந்தச் செயற்பாடுகள் இடம்பெறுமாக இருந்தால் எமது அரசில் இது தடுத்து நிறுத்தப்படும்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
