மன்னாரில் காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை கவனயீர்ப்பு பேரணி

1 month ago



மன்னாரில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டுவரும் காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாளை புதன்கிழமை (11) கவனயீர்ப்பு பேரணி ஒன்று மன்னாரில் இடம்பெறவுள்ளது.

இதில் அனைவரையும் கலந்து கொண்டு ஆதரவை வழங்குமாறு மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மாக்கஸ் அடிகளார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மன்னார் பிரஜைகள் குழுவில் இன்று செவ்வாய்க்கிழமை (10) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மன்னாரில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும் வகையில் காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வு இடம் பெற்று வருகிறது.

காற்றாலை மின் உற்பத்தி மக்களுக்கு நன்மையை ஏற்படுத்தும் செயல் திட்டமாக காணப்பட்டாலும், குறித்த காற்றாலைகள் அமைக்கப்படும் இடம் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

மன்னார் தீவு மற்றும் பெருநிலப் பரப்பிலும் கனிய மணல் அகழ்வு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மக்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்ற போதும், குறித்த நடவடிக்கை தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

எனவே மக்களின் வாழ்வியலைப் பாதிக்கும் காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மன்னார் பிரஜைகள் குழு, பொது அமைப்புக்கள். மீனவ அமைப்புகள் உள்ளடங்களாக சிவில் அமைப்புக்கள் இணைந்து நாளை புதன்கிழமை காலை மன்னாரில் கவனவீர்ப்பு பேரணி ஒன்றை முன்னெடுக்க ஏற்பாடு செய்யபபட்டுள்ளது.

காலை 9 மணிக்கு மன்னார் பொது விளையாட்டு மைதான வீதியில் ஆரம்பமாகி பிரதான வீதியூடாக மன்னார் நகரைச் சென்றடையும்.

அதனை தொடர்ந்து ஜனாதிபதிக்கு கையளிக்கப்பட வேண்டிய கோரிக்கை அடங்கிய மகஜர் மன்னார் மாவட்ட அரச அதிபரிடம் வழங்கி வைக்கப்படும்.

குறித்த பேரணியில் மன்னார் மாவட்ட மக்கள், வர்த்தகர்கள் உள்ளடங்களாக அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு எமது இருப்பை தக்க வைக்க அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்.-என்றார்.