பல்துறை ஆளுமைமிக்க மூத்த படைப்பாளி ஊடகவியலாளருமான நா.யோகேந்திரநாதனின் இழப்பு ஈழ மண்ணுக்கு பேரிழப்பு- யாழ்.ஊடக அமையம் தெரிவிப்பு

ஈழத்தின் வலிகளை எழுத்தின் மூலம் வெளிக்கொண்டு வந்த பல்துறை ஆளுமைமிக்க மூத்த படைப்பாளியும் ஊடகவியலாளருமான நா.யோகேந்திரநாதன் (வயது 80) இன்று 29.12.2024 ஞாயிற்றுக்கிழமை பல கேள்விகளுடன் விடையின்றி இந்த மண்ணை விட்டுச் சென்றமை ஈழ இலக்கியதுறைக்கு பெரும் இழப்பாகும்.
அவரின் இழப்பில் யாழ்.ஊடக அமையம் தனது ஆழ்ந்த துயரினை அனைவருடனும் பகிர்ந்து கொள்கின்றது.
யாழ்ப்பாணம் - வடமராட்சி கரணவாயைப் பிறப்பிடமாகக் கொண்ட அவர் கிளிநொச்சி - திருவையாறு தபாலகத்தின் உதவித் தபால் அதிபராகப் பணியாற்றியிருந்தார்
1960களில் நிலம் புலம் சார்ந்து எழுத்தின் மூலம் ஈழ உலகை வடிவமைக்கும் இலக்கியத் துறைக்குள் பிரவேசித்தார்.
இலங்கை வானொலியில் நாடக எழுத்தாளராக பணியாற்றிய அவர், போர்க்காலத்தில் புலிகளின் குரல் வானொலியில் நாடக எழுத்தாளராகவும் தயாரிப்பாளராகவும் கடமையாற்றினார்.
உயிர்த்தெழுகை, உயிர் குடிக்கும் பறவைகள், சாம்பல் பறவைகள், காவல் வேலி போன்ற நாடகத் தொடர்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன.
கண்ணீர் மழலைகள், விடுதலை முழக்கம் உட்பட பல தொடர் நவீனங்களை எழுதிய அவர் பலநூற்றுக்கணக்கான சிறுகதைகளையும் படைத்துள்ளார்.
போர்க் காலத்தில் பல வீதி நாடகங்களையும் உருவாக்கியிருந்தார்.
1993இல் ஈழநாதம் நாளிதழ் வன்னிப் பிராந்தியத்துக்கான பதிப்பை தொடங்கிய போது 1995 வரை அதன் ஆசிரியராகவும், யாழ்ப்பாணத்தில் வெளிவந்த “புதுவிதி” வார இதழின் கௌரவ ஆசிரியராகவும் பணியாற்றினார்.
யாழ்ப்பாணத்தில் வெளிவரும் பத்திரிகைகளில் சந்திரசேகர ஆசாத், யோகநாராயணன், விஷ்ணுபுத்திரன், அக்கினீஸ்வரன் என்ற புனை பெயர்களிலும் நா.யோகேந்திரநாதன் என்ற இயற்பெயரிலும் அரசியல் கட்டுரைகளை எழுதியுள்ளார்.
சமூக ஒடுக்குமுறையை வெளிப்படுத்தும் விதமாக இடிபடும் இரும்புக் கோட்டைகள் என்ற நாவலையும் இவர் படைத்திருந்தார்.
இவர் எழுத்திய 3 நாவல்கள் தேசிய ரீதியில் விருதுகளை வென்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
அத்துடன் இலங்கை வானொலியில் ஒலிப்பரப்பான காட்டு நிலா, என்ற வானொலி நாடகம் நூலாக வெளியாகியிருந்தது.
தமிழ் மக்களின் விடுதலைப் போரை ஆவணமாக்கும் பெருமுயற்சியில் அளப்பரிய பங்காற்றிய அவர் போராட்ட வரலாற்றை மையமாகக் கொண்டு நீந்திக் கடந்த நெருப்பாறு, (முள்ளிக்குளத்திலிருந்து கிளிநொச்சிவரை), நீந்திக்கடந்த நெருப்பாறு (கிளிநொச்சியிலிருந்து புதுமாத்தளன் வரை), மரண மழையில் நீந்திக் கடந்த நெருப்பாறு என்ற நாவல்களைப் படைத்திருந்தார்.
கடும் சுகயீனத்தால் பாதிக்கப்பட்டிருந்த வேளையிலும் ஆனையிறவை வெற்றிகொண்ட வரலாற்றை வெளிப்படுத்தும் விதமாக 39 நாட்களில் நீந்திக் கடந்த நெருப்பாறு என்ற நாவலை அண்மையில் வெளியிட்டிருந்தார்.
யோகேந்திரநாதன் படைப்புத்துறை தவிர்த்து கூத்துக் கலைஞராக, அரங்க நாடக நடிகராக வீதி நாடகத் தயாரிப்பாளராக, வானொலி நாடக தயாரிப்பாளராக, குரல் வழங்குநராக, சிறந்த விமர்சகராக, பேச்சாளராக எனப் பல்துறை ஆளுமையாளராக மிளிர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இடது சாரிக் கொள்கையை மாறாத பற்றுடன் தன் வாழ்நாள் முழுவதும் பின்பற்றிய அவர் சமூக அடக்குமுறைகளுக்கு எதிராக அளப்பரிய பங்காற்றினார். இதனால் பல்வேறு இன்னல்களுக்கும் அவர் முகம் கொடுத்திருந்தார்.
தனது கனதியான படைப்புகள் மூலம் தமிழ்த் தேசிய எழுச்சிக்கு வலுச் சேர்த்த அவர், விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களால் மதிப்பளிக்கப்பட்டார்.
யாழ்.ஊடக அமையம் தமிழ் தேசியத்தின் அர்ப்பணிப்பு மிக்க ஆளுமைகளை வnழ்நாளில் கௌரவிக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டில் அவரின் ஊடக பணிக்காக விருது வழங்கி கெளரவித்தமை குறிப்பிடத்தக்கது.
மத்திய குழு யாழ். ஊடக அமையம்
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
