2015 -2019 ஆம் ஆண்டு வரையில் வரையப்பட்ட புதிய அரசமைப்பு பற்றி பேச வேண்டிய தேவை இல்லை. சி.வி.கே.சிவஞானம் தெரிவிப்பு



2015 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையில் (நல்லாட்சி காலத்தில்) வரையப்பட்ட புதிய அரசமைப்பு வரைவு பற்றி நாங்கள் பேச வேண்டிய தேவை இல்லை. அது ஏற்கனவே கைவிடப்பட்டாயிற்று.
புதிய அரசமைப்பு மற்றும் இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் நாடாளுமன்றத்தில் கூட்டாகச் செயற்படுவது தொடர்பான கலந்துரையாடலுக்குக் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. வழங்கிய அழைப்புக் கடிதம் தொடர்பாக தமிழரசுக் கட்சியின் குழு சாதகமாகக் கலந்துரையாடி மேல் நடவடிக்கை எடுக்கும்." -இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம் பலம் எம்.பி. மற்றும் அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந் திரன் ஆகியோருடனான நேற்றைய சந்திப்புக்குப் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற் கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பியும், சிவஞானம் சிறீதரன் எம்.பியும் நாடாளுமன்றத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர்.
இது தொடர்பில் கட்சியின் மத்திய செயற்குழுவில் பேசியிருக்கின்றோம்.
அவர்களுடைய முன் முயற்சிக்கு விரோதமாகவோ, எதிராகவோ, மாறாகவோ ஒரு நிலைப்பாட்டை நாங்கள் எடுக்கவில்லை. அரசமைப்பு தொடர்பான விவகாரங்களைக் கையாள்வதற்கு ஏழு பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளோம்.
இந்நிலையில், புதிய அரசமைப்பு மற்றும் இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் நாடாளுமன்றத்தில் கூட்டாகச் செயற்படுவது தொடர்பான கலந்துரையாடலுக்குக் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமது கட்சி ஊடாக அழைப்புக் கடிதத்தை உத்தியோகபூர்வமாகத் தந்திருக்கின்றார்.
நாளை (இன்று) தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ப.சத்தியலிங்கத்தை நேரில் சந்திக்கக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது.
அவரிடமும் இந்தக் கடிதத்தைக் கையளித்து ஏனையவர்களுடன் பேசி முடிவைத் தெரிவிப்பதாகச் சொல்லியிருக்கின்றேன்.
கஜேந்திரகுமாரின் அழைப்புக் கடிதம் தொடர்பில் சாதகமாக ஏனைய ஆறு பேருடன் கலந்துரையாடி தேவைப்பட்டால் அரசியல் குழுவிலும் கலந்துரையாடி மேல் நடவடிக்கை எடுப்போம்.
இதனை ஒரு சாதகமான நகர்வாக நான் பார்க்கின்றேன்.
மேலும் ஒரு விடயத்தைச் சொல்லியிருக்கின்றேன். அதாவது 2015ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரையில் (நல்லாட்சி காலத்தில்) வரையப்பட்ட புதிய அரசமைப்பு வரைவு பற்றி நாங்கள் பேச வேண்டிய தேவை இல்லை. அது ஏற்கனவே கைவிடப்பட்டாயிற்று.
ஆனபடியால் 2021 இல் (கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில்) விசேட நிபுணர் குழுவுக்குச் சமர்ப்பித்த ஒரு முன்மொழிவு இருக்கின்றது.
அதையும் சேர்த்து கஜேந்திரகுமாருடைய கருத்துக்களோடு பகிர்ந்து நாங்கள் சுமுகமான ஒரு முடிவுக்கு வரக்கூடியதாக இருக்கும்.
அப்படி இருக்க வேண்டும் என்பதுதான் எங்களது மத்திய செயற்குழுவிலும் ஒரு முடிவாக இருந்தது.
அந்தவகையில் இந்த விடயங்களைக் கையாளுகின்ற எமது கட்சியின் குழுவினருடன் கலந்து பேசி மேல் நடவடிக்கையை எடுப்போம்.
இது ஒரு சாதகமான நகர்வாகவே நான் பார்க்கின்றேன்."என்றார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
