மன்னார் மக்களின் காணிகள் அபகரிப்பு பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் இல்லை! அருட்தந்தை எஸ். மார்க்கஸ் குற்றச்சாட்டு.

மன்னார் மாவட்டத்தில் பல்வேறு கோணங்களில் மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டு வருகின்ற போதும், இதுவரை பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கவில்லை. எனவே மாவட்ட மக்கள் எதிர்நோக்கும் சகல விதமான பிரச்னைகளுக்கும் நாட்டின் ஜனாதிபதி உரிய தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டும் என மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.மார்க்கஸ் அடிகளார் தெரிவித்தார்.
மன்னார் மாவட்ட மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விசேட ஊடக சந்திப்பு நேற்று செவ்வாய்க்கிழமை (06) மதியம் மன்னார் பிரஜைகள் குழு அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-
மன்னார் மாவட்டத்தில் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக கனிய மணல் அகழ்வுத் திட்டத்தை முன்னெ டுப்பதற்கான பாரிய முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன.
பல்வேறு கம்பனிகளால் பாரிய முயற்சிகள் இடம்பெற்ற போதும் இறுதியில் கம்பனி ஒன்று கனிய மணல் அகழ்வுக்காக மன்னார் மாவட்டத்தில் கால் பதித்துள்ளது. குறித்த கம்பனி குறித்த இடத்தை கையகப்படுத்திக்கொள்ள அனுமதி வழங்க பல்வேறு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
மக்கள் சார்பாக நாங்கள், பொது அமைப்புக்கள் பல்வேறு எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்ற போதும், குறித்த நடவடிக்கையை செயல்படுத்த பல்வேறு அரச நிறுவனங்களின் முயற்சியுடன் வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எதிர்வரும் 14 ஆம் திகதி கனிய மணல் அகழ்வு செய்யப்படவுள்ள இடங்களை நில அளவீடு செய்ய சுமார் 32 அரச திணைக்களங்களின் உதவியுடன் முன்னெடுக்கப் படவுள்ளது.
இதை மன்னார் மாவட்ட மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து முழுமையாக எதிர்க்க உள்ளோம். மக்கள் ஒன்றிணைந்து முழுமையாக எதிர்ப்பை காட்ட உள்ளோம்.
எனவே குறித்த நடவடிக்கை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். ஜனாதிபதி இவ்விடயத்தில் தலையிட வேண்டும் - என்றார்.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
