யாழ்.செம்மணி - சித்துப்பாத்தி இந்துமயான மனிதப் புதைகுழியில் ஒரு சிசுவின் என்புத்தொகுதி உட்பட இதுவரை 13 என்புத்தொகுதிகள் அவதானிப்பு



யாழ்ப்பாணம் செம்மணி - சித்துப்பாத்தி இந்துமயானத்தில் அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வரும் மனிதப் புதைகுழியில் ஒரு சிசுவின் என்புத்தொகுதி உட்பட இதுவரை 13 என்புத்தொகுதிகள் அவதானிக்கப்பட்டுள்ளன.
இதனால், இந்தப் புதைகுழி மிகப்பெரியதாக இருக்கலாம் என்ற அச்சம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
அரியாலை சித்துப்பாத்தி இந்துமயானத்தில், கடந்த பெப்ரவரி மாதம் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழியில் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய தற்போது அகழ்வுப் பணிகள் இடம்பெற்றுவருகின்றன.
பணிகளின் ஐந்தாம் நாளான நேற்றையதினம் சிறிய என்புத்தொகுதியொன்று அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
முகத்தோற்றத்தின் அளவில் அது ஒரு வயதுக்கு உட்பட்ட சிசுவுடையதாக இருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.
அத்துடன், இதுவரை 13 என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் ஐந்து தொகுதிகள் முற்றாக மீட்கப்பட்டுள்ளதுடன், ஏனையவற்றை அகழும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வரும் மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை ஆடைகள் எவையும் மீட்கப்படவில்லை. அத்துடன், வேறு சில என்புச் சிதிலங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன.
துறைசார் நிபுணரும் பேராசிரியருமான சோமதேவாவின் தலைமையில் அகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நீதவான் ஆ.ஆனந்தராஜா அகழ்வுப் பணிகளைக் கண்காணித்து வருகின்றார்.
காணாமல் ஆக்கப்பட்டோர் ஆணைக்குழுவின் சட்டத்தரணி பூரணி மரியநாயகம், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பான சட்டத்தரணி நிறஞ்சன், சட்ட மருத்துவ அதிகாரி செல்லையா பிரணவன் தலைமையிலான குழுவினர் ஆகியோரும் அகழ்வுப் பணிகளின்போது முன்னிலையாகி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
