யாழ். இந்திய துணைத் தூதரகம் முன்பாக மீனவர்கள் போராட்டம்!

1 year ago

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழையும் இந்திய இழுவைமடி படகுகளை தடுத்து நிறுத்துமாறு வலியுறுத்தி யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதரகம் முன்பாக நேற்று கடற்றொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

“இந்திய அரசே எமது கடல் வளங்களை சூறையாடாதே - எம்மையும் வாழவிடுங்கள்" என்று கோரிக்கையை முன்வைத்து யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மருதடி சந்தியில் இருந்து கடற்றொழிலாளர்கள் பேரணியாக இந்திய துணைத் தூதரகத்துக்கு சென்று  அங்கு நின்றவாறு இலங்கை கடற்படையே நிறுத்து நிறுத்து அத்துமீறலை தடுத்து நிறுத்து, கடற்தொழில் அமைச்சரே கண்ணை திறந்து பார், இந்திய அரசே எம்மையும் வாழ விடு, சிறீலங்கா பொலிஸே எங்களைத் தடுக்காதே போன்ற கோஷங்களை எழுப்பினர்.

போராட்டத்தின் முடிவில் இந்திய துணைத் தூதுவரிடம் கடற்றொழிலா ளர் பிரதிநிதிகள் கோரிக்கை மனுவை கையளித்தனர்.

அண்மைய பதிவுகள்