அரச வருமானத்தை அதிகரிக்காமல் கடன் பெற்றுக் கொள்வது பாரிய ஆபத்தை விளைவிக்கும்.-- ஹர்ஷ டி சில்வா தெரிவிப்பு

1 year ago



அரச வருமானத்தை அதிகரிக்காமல் கடன் பெற்றுக் கொள்வது பாரிய ஆபத்தை விளைவிக்கும் என ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் அமைந்துள்ள ஐக்கிய மக்கள் கூட்டணியின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்- புதிய அரசாங்கம் கடன் பெற்றுக்கொள்வது பற்றி இப்போது அதிகம் பேசப்படுகிறது.

நாம் கடன்பெற மாட்டோம் என மேடைகளில் பேசியோர் இன்று கடன் பெற்றுக்கொள்கின்றனர்.

உண்மையில் அரச வருமானத்தை அதிகரிக்காமல் கடன் பெற்றுக்கொள்வது பாரிய ஆபத்தை விளைவிக்கும்.

எம்மிடமுள்ள அந்நிய செலாவணி இருப்பை அதிகரித்துக்கொள்ளுதல் அவசியமாகும்.

அவ்வாறில்லாமல் தொடர்ச்சியாக கடன் பெற்றுக்கொள்ளும்போது மீள செலுத்துவதற்கான இயலுமையை நாம் இழந்துவிடுவோம்.

இந்த யதார்த்தமான சூழ்நிலையை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும்.

மேலும், நாட்டில் தற்போது அரிசிக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.

அரிசி வியாபாரத்தை தன்னகப்படுத்தியிருக்கும் ஒருசிலரின் செயற்பாடுகளே இதற்குக் காரணம்.

ஆயினும் இந்த விடயம் குறித்து ஜனாதிபதியோ அமைச்சர்களோ இதுவரை எந்தக் கருத்தையும் முன்வைக்கவில்லை-என்றார்.

அண்மைய பதிவுகள்