மகா கும்பமேளாவை முன்னிட்டு, பிரயாக்ராஜ் நகரில் உள்ள திரிவேணி சங்கமத்தில் பிரதமர் நரேந்திர மோடி புனித நீராடினார்.








மகா கும்பமேளாவை முன்னிட்டு, பிரயாக்ராஜ் நகரில் உள்ள திரிவேணி சங்கமத்தில் பிரதமர் நரேந்திர மோடி புனித நீராடினார்.
இந்தியா உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய 3 நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் கடந்த ஜனவரி 13ஆம் திகதி மகா கும்பமேளா தொடங்கியது.
எதிர்வரும் 26ஆம் திகதி வரை நடைபெறும் இவ்விழாவில் இந்தியா மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் தினமும் புனித நீராடி வருகின்றனர்.
கடந்த 4ஆம் திகதி வரை 38 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடி உள்ளதாக உத்தர பிரதேச அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பிரயாக்ராஜ் நகருக்கு நேற்று சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அரைல் படித்துறையிலிருந்து படகு மூலம் திரிவேணி சங்கமம் சென்றார்.
அங்கு காவி உடை, ருத்ராக்ஷ மாலை அணிந்திருந்த பிரதமர், நீரில் மூழ்கி எழுந்து பிரார்த்தனை செய்தார்.
அவருடன் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் இருந்தார்.
சங்கமத்தில் புனித நீராடிய பின்னர், ஆற்றின் நடுவில், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு மிதவையில் நின்றபடி ஆரத்தி எடுத்தார்.
அப்போது பால் மற்றும் பழங்களை ஆற்றில் கொட்டி வழிபாடு நடத்தினார்.
இந்நிகழ்ச்சிக்குப் பிறகு பிரதமர் மோடி கூறும்போது,
“பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் பங்கேற்பது மிகவும் ஆசீர்வதிக்கப்பட்ட விஷயம்.
சங்கமத்தில் புனித நீராடுவது ஒரு தெய்வீக இணைப்பின் தருணம்.
இதில் பங்கேற்ற கோடிக்கணக்கான பக்தர்களைப் போல நானும் பக்தியின் உணர்வால் நிரப்பப்பட்டேன்.
அன்னை கங்கா அனைவருக்கும் அமைதி, ஞானம், நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்லிணக்கத்தை ஆசீர்வதிக்கட்டும்” என்றார்.
நாட்டில் உள்ள ஆன்மிக தலங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பிரதமர் மோடி உறுதி பூண்டுள்ளார்.
இதன்படி, கடந்த டிசம்பர் மாதம் பிரயாக்ராஜ் நகருக்கு வருகை தந்த பிரதமர் மோடி, ரூ.5,500 கோடி மதிப்பிலான (இந்திய மதிப்பில்) 167 வளர்ச்சி திட்டங்களைத் தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்

ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
